ஆசிரியர் பக்கம்
19 ஆகஸ்ட் 2011
அண்மையில் நோர்வேயில் நடந்த அவலங்களைத் தொடர்ந்து கல்விஅமைச்சினால் விடுக்கப்பட்ட அறிக்கை பின்வருமாறு.
கல்வி அமைச்சு
சிறு குழந்தைகளுடன் எவ்வாறு உரையாடுவது
'சில சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் நடந்த அவலங்கள் சம்பந்தமாக மிகைப்படுத்தி குழந்தைகளுடன் உரையாடுவதாகவும், வேறு சில சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இவ்விடயத்தைப் பற்றி பிள்ளைகளுடன் உரையாடுவதற்கு மிகவும் தயங்குவதாயும், பெற்றோர்களிடமிருந்து எமக்கு அறியப்படுத்தப்படுகின்றன. மழலைகளுடன் எவ்வாறு உரையாடுவது என்பது சம்பந்தமாய் தகுந்த ஆலோசனைகளை தற்பொழுது நாம் தயாரித்துள்ளோம', என கல்வி அமைச்சர் Kristin Halvorsen குறிப்பிட்டுள்ளார். – 'மிகவும் இக்கட்டான இக்கால கட்டத்தில், சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் திறப்பு நன்றாக அமைய எமது வாழ்த்துக்கள்!', என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், பாடசாலை தவிர்ந்த நேரங்களில் பாடசாலையில் நடாத்தப்படும் பராமரிப்பு நிலையங்கள் (Skolefrtidisordning) ஆகியவற்றில் கோடைகால விடுமுறையைத் தொடர்ந்து, பல குழந்தைகள் மீண்டும் வருகை தரத் தொடங்கிவிட்டார்கள். இன்னும் பலர் ஆகஸ்ட் 1ஆம் திகதி ஆரம்பிக்கிறார்கள். சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், பாடசாலை தவிர்ந்த நேரங்களில் பாடசாலையில் நடாத்தப்படும் பராமரிப்பு நிலையங்களில் பணிபுரிவோர் மற்றும் பெற்றோர், பெரியவர்கள் (பாட்டன், பாட்டி) போன்றவர்கள் பிள்ளைகளுடன், மழலைகளுடன் எவ்வாறு நடந்த அவலம் சம்பந்தமாய் அளவளாவுவது என்பது பற்றிய தகுந்த ஆலோசனைகளை இங்கே தொகுத்துள்ளோம். ஆலோசனைகள் பொதுவானவையாக இருப்பினும், மழலைகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் ஏற்ற வகையிலே தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் தேவைகள் நேரத்திற்கு நேரம் மாறுபடும் என்பதும் அதற்கேற்ப சரியான தெரிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதும் கவனத்தில் கொள்ளப்படுவது மிகவும் முக்கியமானது.
அமைதி, ஆறுதல்
அமைதியையும் ஆறுதலையும் கடைப்பிடிப்பது முக்கியம். நிறைய நேரம் பாவித்து, மிகவும் ஆறுதலாக, ஆசுவாசமாக நடந்த அவலத்தைப்பற்றி உரையாடுவதுடன், குழந்தைகள் தங்கள் கேள்விகளையும் வினவலாம் என்பதும் விளக்கப்படுத்த வேண்டும். பிள்ளைகளின் கவனத்தை ஈர்த்த விடயங்களையும் தெளிவுபடுத்தலாம்.
• குழந்தைகளின் வயதும், ஒவ்வொருவரின் தேவையும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.
• சிலர் பேச விரும்புவர், சிலர் பேச விரும்பமாட்டார்கள். பேச விரும்பாதவர்மீது முக்கியமாக கவனம் செலுத்தவும்.
• பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும். பேச விரும்பாத பிள்ளைகளை உரையாடலில் ஈடுபடுத்த முயற்சிக்கவும். அதே வேளை அவர்கள் அதை விரும்பாவிடில் அதற்கு மதிப்பளிக்கவும்.
• நிறைய நேரம் பாவிக்கவும். அவதானத்தையும் கவனத்தையும் கடைப்பிடிக்கவும். ஒவ்வொரு பிள்ளையையும் நிறைய அவதானிக்கவும்.
உண்மைத்தன்மை, விளங்கிக்கொள்ளக்கூடியவகை
உண்மையான தகவல்கள் முக்கியமெனினும் அவை பிள்ளைகள் விளங்கிக் கொள்ளக்கூடியதாக அமைந்திருக்க வேண்டும். பிள்ளைகள் புரிந்து கொண்டார்களா என்பதை அறிந்து கொள்ள அவர்களின் எண்ணங்களையும் சிந்தனைகளையும் பற்றி வினவலாம்.
• பிள்ளைகள் கேட்பதை விட மேலதிகமாக விளக்கம் சொல்லத் தேவையில்லை.
• பிள்ளைகள் தாங்கள் கேட்டதை, பார்த்ததை, உணர்ந்ததை, அனுபவித்ததைப் பற்றி தங்கள் மொழியிலேயே தங்கள் சொந்த வார்த்தைகளுடனே விவரிக்க அனுமதிக்கவும்.
• பிள்ளைகள் விளங்கும்விதத்தில் எளிய வார்த்தைகள், விளக்கங்களைப் பயன்படுத்தவும். (குற்றச்செயலில் ஈடுபட்டவரை நகரகாவலர் கைது செய்துள்ளமையையும், சம்பந்தப்பட்டவர் சிறையிலடைக்கப்பட்டிருப்பதையும் விளக்கவும்.)
• பிள்ளைகள் தங்கள் எண்ணங்களை விவரிக்கும் போது கவனமாக செவிமடுக்கவும்.
பாதுகாப்பு உணர்வு, நேரம்
பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்துவதோடு, அவர்களோடு நிறைய நேரத்தைச் செலவிடவும் (வெளி விளையாட்டுகள், பக்கத்திலிருந்து வாசித்தல் போன்ற நடவடிக்கைகள்). அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தவும்.
• நீங்கள் எதுவித கலக்கமுமில்லாமல், பாதுகாப்பாய் இருப்பதை வெளிப்படுத்தவும்.
• பிள்ளைகளுடன் வழமையைவிட நெருக்கமாயிருக்கவும். பிள்ளைகளுக்கு ஆறதலையும் நேரத்தையும் வேண்டிய அளவில் தரவும்.
• உரையாடலிலும், விளையாட்டிலும், மற்றைய நடவடிக்கைகளிலும் பிள்ளைகளுடன் சேர்ந்திருக்கவும்.
• அஞ்சலி நிகழ்வுகளில் தேவைப்படுமிடத்து பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்ளவும். உதாரணமாக, உரையாடலின் ஒரு பகுதியாக, விளக்கேற்றி அஞ்சலிக்கவும், ஓவியம் வரையவும் பிள்ளைகளுக்கு சந்தர்ப்பம் வழங்குவது சிறந்தது. அதே வேளை பிள்ளைகளின் வேறு விருப்புகள், அபிலாசைகள், அனுபவங்களுக்கும் இடமளிக்கவும்.
• வழமைக்குத் திரும்ப முயற்சிக்கவும். இயலுமாயின், பிள்ளைகள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிகழ்வுகள், நடவடிக்கைகளை இரத்துச் செய்வதைத் தவிர்க்கவும்.
நல்ல விடயங்கள்
பிள்ளைகளுக்கு நல்ல விடயங்களான, பாதிக்கப்பட்டோர்க்கான உதவித்திட்டங்களைப் பற்றியும் எத்தகைய உதவித்திட்டங்கள் பாதிக்கப்பட்டோர்க்கு வழங்கப்படுகின்றன என்பன பற்றியும் விபரிக்கவும்.
• நல்ல சம்பவங்களை முன்னிலைப்படுத்துக. எல்லாப் பெரியவர்களும் பாதிக்கப்பட்ட இளையோரை, அவர்களின் பெற்றோர்கள் வரும்வரை, பாதுகாத்து ஆறுதற்படுத்தினார்கள், நகரகாவலர் கொடியவனை சிறைப்பிடித்தார்கள், அவசரச்சிகிச்சை வண்டிகளும், மருத்துவர்களும் காயப்பட்டவர்க்கு உடனடி மருத்துவ உதவி செய்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள், நண்பர்கள் எத்துணை அன்பாயிருக்கிறார்கள், நாம் ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொள்கிறோம், பூக்களை சமர்ப்பிக்கிறோம் போன்ற உதாரணங்களை உரையாடலில் பயன்படுத்தலாம்.





